Monday, July 30, 2012

5. புதிய கீதை


நீ  அழுக ஆரம்பித்தது எப்போது?
உலகில் பிறந்து அழ ஆரம்பித்தபோதே 
அழுகவும் ஆரம்பித்து விட்டாய்.

அழுகுவதென்றால்
பெரு நோய்க்காரன் போல்
உடல் அழுகி ஒழுகுவது என்பதில்லை!

உன் உள்ளம்
ஓயாமல் அழுகிக் கொண்டிருக்கிறதே,
அது போதாதா?

பூக்காமல், காய்க்காமல், பழுக்காமல்,
மொட்டு விட்டதுமே
அழுக ஆரம்பித்து விடுகிற
ஒரே தாவர இனம்
உன்னுடைய மனித இனம்தான்!

அழுகலின் அளவுதான்
ஆளுக்காள் வேறுபடுமே தவிர,
அழுகுவதென்பது
அனைவர்க்கும் பொதுதான்.

சிலருக்கு,
உள்ளத்துடன் சேர்ந்து
உடலும்
அழுகி விடுகிறது.

வேறு சிலர்
உடல் அழுகாமல் 
உரமாக இருக்கும்போதே,
உள்ளம் வெம்பி,
அழுகிச் சாகிறார்கள்.

இந்த உண்மைகள்
உனக்கு உரைக்கும்போது
உன் அழுகல்
இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

ஆனாலும் ஒன்று-
கவலைப்பட இதில் ஏதுமில்லை.

ஏனென்றால்,
அழுகல்
உன் உடலுக்கும்,
உள்ளத்துக்கும் இயல்பே தவிர,
உன்  ஆத்மா
என்றும் அழுகுவதில்லை.
அதை நினைத்து
ஆறுதல் கொள்!