Monday, September 24, 2012

15. அடைக்கலம்


சிரிக்கும் மலர்களிலிருந்து
நறுமணத்தைச் சுமந்து வரும்
மெல்லியலாள் தென்றல்
சுமை தாங்காமல்
நறுமணத்தை உதிர்த்துச் செல்ல,
விருந்தோம்பி நாசிகள்
உபசரித்து வரவேற்று,
உள்ளே நுழைந்த
நறுமணத்தையே
விருந்தாக உட்கொள்ளும்!

14. ஒன்றே போதும்


இரண்டு மனம் வேண்டுமாம்*
ஏங்கினார் கவிஞர்.
அவரிடம் இல்லை போலும்!
என்னிடம் இருக்கிறது:
கொள்கை வகுத்து,
திட்டமிட்டு,
முறையாகச் செயல்படத்
தூண்டும் மனம் ஒன்று.
சோம்பலை வளர்த்து,
பொழுது போக்கில் லயித்து,
நேரத்தை விரட்டி,
திட்டங்களைத் தகர்க்கும்
இரண்டாவது.


*"இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்."
'வசந்த மாளிகை'படத்தில்  கவிஞர் கண்ணதாசனின் பாடல்.

13. நிர்ப்பந்தம்


மழைக்காகப் பள்ளியில்
ஒதுங்கியபோது
பார்த்து விட்ட ஆசிரியர்
பிடித்துக் கொண்டார்.
புகட்டத் தொடங்கினார்
கல்வியை -
குடும்ப நலக் கல்வியைத்தான்!

(1970-களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.)

12. The Process


நெஞ்சில் குவிந்த துக்கமெல்லாம்
அழுகையாக வடிந்து தீரட்டும்.
ஆறாக வடியும் கண்ணீரால்
மனக்கிணறு வற்றட்டும்
ஈரம் காய்ந்த மனத்தில்
கோபாக்கினி கிளர்ந்து
காரணங்களைச்
சுட்டெரிக்கட்டும்!

11. மாறாட்டம்


தகுதி இல்லாதவரைப்
பதவியும், பெருமையும்
வலுவில் வந்தடைவது
கெட்டு விட்ட காலத்தின்
அட்டூழியம் -
அன்றாட உணவுக்கே போராடும்
எனக்கு
செல்வத்தின் சீர்களான
சர்க்கரை நோயும்,
ரத்தக் கொதிப்பும்
வந்திருப்பது போல்!