Sunday, October 14, 2012

33. Side Effect


குளக்கரையில்
வெண்ணிலவின் மென் தழுவலில்
காதலியின் அண்மையில்
கிறுகிறுத்த காதலன்
காதலியை வர்ணித்தான்
'நிலவு முகத்தவளே' என்று.

கேட்டுக் கொண்டிருந்த அல்லி
அதிர்ந்து கூம்பியது.
'பெண்மை இயல்புடையவனா என் காதலன்?'

32. சிக்கலில் ஒரு சிக்கல்


சிக்கல் நிறைந்ததே
வாழ்க்கை.
பொறுமையுடன்
சிக்கலைப் பிரித்தெடுத்துச்
சிறப்பாக வாழ்வதே
அறிவாளிகளுக்கு அழகு.

தத்துவம் சரிதான்.

சிக்கலை எடுக்க
நாங்கள் தயார்.
பொறுமைக்கும் குறைவில்லை.
நேரமும் நிறையவே இருக்கிறது.
ஆனால்-
சிக்கலெடுக்க
நூல்தான் இல்லை!

31. திரைகள்


அங்கம் விதிர்த்திருக்க, அன்பு உடைப்பெடுக்கத்
திங்களைக் கவ்வி மறைக்கும் திரளான மேகமொக்கும்
தங்கம் கருத்தாற்போல் ஒளியகன்ற முகத்திலாடும்
செங்கணிரண்டிலும் வெள்ளமாய்ப் பெருகும் நீர்
பொங்கும் பிரவாகமாய்ப் பரவ விடாமல் தேக்கியதால்
அங்கே சிறையுண்ட நீராக உலகை மறைத்திடும் திரை ஒன்று.


மனதுக்கினிய கணவன் மறைந்திட்ட மனச்சோர்வும்
எனதென்ற உரிமை அங்கே பறிபோன பதற்ற நிலையும்
மணவாழ்வின் இன்பமெல்லாம் மண்ணாகி மடிந்து போன
கணநேரப் பொழுது தந்த கல்லான மனச் சுமையும்
பிணமான இனியவனைப் பார்ப்பதால் கூடுவதால்
கனமான சேலைத் தலைப்பால் முகமூடும் திரை ஒன்று.


எத்தனையோ காட்சிகள் இதுபோன்று கண்டிருந்தும்
அத்தனையும் தமக்கல்ல என்றதோர் இறுமாப்பில்
இத்தரையில் என்றோ தமக்கும் வரும் இந்நிலை என்ற
தத்துவத்தை உணராமல் தம் மனம்போல் வாழ்ந்து வரும்
பித்தரான மனிதரின் புத்தியை மரக்க வைத்திவ் வாழ்வே
நித்தியம் என உணர்த்தும் மாயையின் திரை ஒன்று.


இப்படிப் பல திரைகள் மறைத்திருக்கும் மாந்தர் பலர்
எப்படி அழைத்தும் செவிமடாமல் குறையின்றித் துயில்கின்ற
அப்பழுக்ககன்ற ஆடைத் திரைக்குள் மறைந்தவன்
செப்புமொழி ஏதுமின்றி ஆழ்ந்திருக்கும் நித்திரையும்
எப்படியோ உலகை மறைக்கும் வலுவான ஓர் திரைதான்
எப்பாலும் நிறைந்திருக்கும் இறைவனிட்ட திரை இதுவே!



30. வான் நோக்கி


நிலமாக முன்பு இருந்தது
இப்போது நீர்.
மிதப்பவை
கட்டு மரங்கள் அல்ல -
மனிதக் கட்டைகள்.
காற்றுப் போன காயங்கள்.

மரக் கட்டைகளும் மிதக்கின்ற.ன
முன்பு
தூணாக, கூரையாக, வீடாக
இருந்தவை.

ஆங்காங்கே தீவுகள்.
அவற்றில் ஒதுங்கும்
மனிதர்கள்
வானத்தை நோக்கியபடி.

முன்பு மழை இல்லாதபோது பார்த்ததும்
பெய்த மழை நிற்காதா என்று பார்த்ததும்
இப்போது பார்ப்பதும்
வெவ்வேறு பார்வைகள்!

உறவுகளும், உடைமைகளும்
போன பின்னும்
வயிறு மட்டும் மிஞ்சி விட்டதால்
வானத்திலிருந்து விழப் போகும்
உணவுப் பொட்டலங்களை
எதிர்பார்க்கும்
பார்வைகள்!

29. ஒரு மானுடக் காதல்


அஞ்சல் வழிக்
காதல் வகுப்புகள்
அஞ்சன விழிகளின்
கலைந்த கோலங்கள்
நாள்தோறும் கனவுகளைத்
தவறாமல் தாங்கி வரும்
விலையேற்றம் செய்யாத
தினசரிகள்
பார்வை வழி பாய்ந்த
உணர்வுகள்

அத்தனையும்...

அந்நியனை மணந்த பின்
ஏஸி ஃபிரிட்ஜ் வசதிகள்
மாருதி யாத்திரைகள்
உயர்குடி உறவுகள்
சமுக சேவை சொகுசுகள்
ஆகியவற்றில்
கரைகின்றன!

28. இந்தியாவின் ஆத்மா



அமைதியான ஆற்றோட்டமும்
பாடும் மூங்கில்களும்
ஆடும் செடிகளும்
அப்பாவிக் கால்நடைகளும்
வஞ்சனையின்றிப்
பரந்து கிடக்கும்
உதிர்ந்த பூக்களும்
நெரிசல் இல்லா வீதிகளும்
தூசும் அழுக்கும் புகையும்
கலவாத சூழலும்....

கிராமங்கள் அழகுதான்

ஆனால்
அங்கிருக்கும்
பசிதீராப் பாட்டாளிகளையும்
படிப்பறிவில்லா பாலர்களையும்
சிரிப்பு மறந்த முகங்களையும்
பற்றி
நமக்கென்ன?

27. எங்க ஊர் கண்ணகி


எங்க ஊர்  கண்ணகிக்கு
யாரும் சிலை எடுக்கவில்லை.

அடுத்த வேளைச் சோற்றுக்காக
அடகு வைக்க எடுத்துச் சென்ற
அவள் ஒற்றைக்கால் கொலுசினால்
திருடன் என்று தீர்மானிக்கப்பட்டு
'தள்ளிச்' செல்லப்பட்ட
புருஷன் கோவாலு
அடித்துக் கொல்லப்பட்டதால்
அவள் இபோது விதவை.

கண்ணகிபோல் இவளுக்கும்
கொளுத்தும் வெறி உண்டு
கெரசின்தான் கிடைக்கவில்லை!

26. முகங்கள்


                 1
தினமும் காண்பது
முகங்களைத்தான்.

காணும் முகங்களில்
பார்த்த முகங்கள் சில
புதுமுகங்கள் பல.

பார்த்த முகங்களில்
பகைத்த முகங்கள் சில
நட்பு முகங்கள் சில
நடுநிலையில் பல.

பகைத்த முகங்கள்
சில சமயம்
பகை மறந்து
நட்பு முகங்களாய்
மாறும்.

நட்பு முகங்கள் சில
நகையிழந்து
நாளடைவில்
நடுநிலையாகும்.

புதுமுகங்கள் எல்லாம்
புதிய முகங்கள் அல்ல.
பலருக்கு அவை
பழைய முகங்கள்தான்.

புதுமுகங்கள் சில
எங்கோ பார்த்த
பழைய முகங்களாக
மயக்கும்.

முகங்கள்
பலகோடி இருந்தாலும்
ஒவ்வொன்றும் தனிஜாடை
ஒன்றைப்போல்
இன்னொரு முகம்
இவ்வுலகில் இல்லை
திரையுலகில் கதை வேறு.


                           2
காண்பது
முகங்களைத்தான் என்றாலும்
முகங்கள்
கண்ணுக்குத் தெரிவதில்லை
தெரிபவை
முகமூடிகள்தான்.

அகத்தைக் காட்டும்
முகக் கண்ணாடியை
வர்ணங்களடித்துச்
சித்திரமாக்கும்
மாய முகமூடிகள்!

முகத்தோடு ஒன்றிவிடும்
முகமூடிகள்
கட்புலனுக்குக்
காணப்படுவதில்லை.

இதனாலேயே
முகமூடிகளையே
முகங்களாக நினைத்துப்
பார்வைகள்
ஏமாறுகின்றன

முகங்கள்
பலகோடியானாலும்
முகமூடிகள்
மிகச் சிலவே.

இதனால்தானோ
பல முகங்கள் எங்கோ
பார்த்த முகங்களாய்
மயக்குகின்றன?


                           3
முகமூடிகள்
கண்ணுக்குத் தெரிவதில்லை
அணிந்தவர் கவனம்
அயராதிருக்கும்வரை.

ஆனாலும்
முகமூடிகள் சில சமயம்
சந்தடியின்றி
நழுவி
அகத்தின் பிம்பத்தைத்
திறந்து காட்டிவிட்டுச்
சென்று விடும்.

அசல் முகங்களின் தரிசனம்
ஒப்பனை துறந்த
நடிகையின் முகம் போல்
நிதர்சனம்!


Friday, October 12, 2012

25. இருப்பிடம்


கூட்டம் நிறை கோவிலில்
உள்ளடங்கிய இருட்டில்
உபய விளக்குகளின்
ஒளிப் பிழம்பிலும்,
பூஜை அறைத் தனிமையில்
பூ வைத்த படங்களின்
ஊதுவத்தி மணத்திலும்
புலப்படாது
நழுவிய தெய்வம்
பிறர் துன்பம் கண்டிறங்கிப்
பயன் கருதாது உதவும்
பரந்த நெஞ்சின் உள்ளிருந்து
விஸ்வரூபக் காட்சி தரும்.

24. வாக்காளர்களின் சுயசரிதம்


நாங்கள் அகலிகைகள்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
ராமர்கள்  வந்து
எங்களை உயிர்ப்பித்து
எங்களின் வாழ்த்துக்களைப்
பெற்றுக் கொண்டு
மீண்டும்
எங்களைக் கல்லாக்கி
மிதித்து விட்டுப் போகிறார்கள்!

இல்லை -
இவர்கள் ராமர்கள் இல்லை
ராமர் வேடத்தில் வரும்
ராவணர்கள்.

முன்பு எங்களை ஏமாற்றி
இந்நிலைக்கு ஆளாக்கிய
இந்திரர்களை விடக் கொடியவர்கள்!

உண்மையான ராமர்
ஒருநாள் வருவார்.
அதுவரை
காத்திருப்போம்
கல்லாக!

Thursday, October 11, 2012

23. தியரியும் பிராக்டிகலும்


இலக்கிய விதிப்படி
உன்னை நான்
பார்க்கும்போது
மண்ணை நீ
பார்க்க வேண்டும்தான்.

ஆனால் நீ
என் காலணிகளைப் பார்த்து
மதிப்பிட்டு
என் பொருளாதார நிலையையன்றோ
கணித்துக் கொண்டிருக்கிறாய்?

22. காத்திருத்தல்


நாராய் நாராய்
செங்கால் நாராய்!
எங்கிருந்து வருகிறாய்?
எங்கே போகிறாய்?

நீ செல்லும் வழியில்
எங்கள் நல்லமைச்சர் நம்பியைப்
பார்த்தால் சொல்.

ஆற்றின்மீது போட்ட பாலம்
ஆறு மாதமாய்
மூடியே இருக்கிறது.

அவர் வந்துதான்
திறக்க வேண்டுமாம்!

21. ஓயாத அலைகள்


சலிக்காமல் திரும்பத் திரும்பக்
கரையில் மோதும் அலைகளே!
நீங்கள் கேட்பதென்ன, பெறுவதென்ன?

கைநீட்டி மீண்டும் மீண்டும்
கதறி கதறிக் கேட்டாலும்
நாங்கள்
கைகொட்டி ரசித்து
வேடிக்கைதான் பார்ப்போமே தவிர
நீங்கள் கேட்பதைக்
கொடுத்துவிடப் போவதில்லை.

எனவே
வறட்டு இரைச்சல் போட்டு
வீணாக மோதுவதைக் கைவிட்டுக்
கரை கடந்து
உள்ளே வந்தால்
வேண்டியதை
எடுத்துச் செல்லலாம்.

20. நான் புத்தனில்லை


நாயைக் கண்டால் உடனே
கல்லொன்றைக் கண்டெடுத்து
அதன் காலை உடைக்கும்
எண்ணத்தைக்
கை விடு.

இது ஜீவகாருண்யம்
சம்பத்தப் பட்டதல்ல
பரிணாமத் தத்துவம்.

ஏனெனில்-

இன்று நாயை அடித்துக் களித்து
நீ விதைக்கும் கொடுமை விதை
உன் சந்ததிகள் காலத்தில்
உன்போன்ற சக மனிதர்களையும்
கல்லால் அடித்துக் கொல்லும்
கொடுமையை
நீதியாக்கிச்
சட்டமியற்றும்
கொடுமையாக வளரும்

இந்தக் கொடிய விதைகள்
ஏற்கெனவே
வேறு இடங்களில் முளைத்துச்
சோதனையில்
தேறியவைதான்.

எனவே இந்த விதைகள்
வீரியம் வாய்ந்தவை.

அதனால்தான் சொல்கிறேன்.
நாயைக் கல்லால் அடிக்காதே.

கவலையினால் சொல்கிறேன்
கருணையினால் சொல்ல
நான் ஒன்றும்  புத்தனில்லை.

Wednesday, October 10, 2012

19. மொழிப் பிரச்னை


காலையில் கண் விழித்ததும்
கலகவென்று உரையாடும்
குருவிகளைக்
காண்கிறேன்.

எவ்வளவு முயன்றும்
அவை பேசும் மொழி
எனக்குப் புரிவதில்லை

அவற்றின் மொழியைக் கற்க
ஒரு வழிதான்.

நானும் அந்தக் குருவிகள் போல்
சுதந்திரமாய் உணர்ந்து
கீசுகீசென்று
அவை மொழியில்
பேசிப் பழக வேண்டியதுதான்.

ஆனால் அப்போது
என் மொழி
புரியாமல் போய் விடும்
பிற மனிதர்க்கு!

18. தன்னிலை விளக்கம்


சிற்பி செதுக்கிய கல்லைத்
தெய்வமென்று நம்பிக்
கும்பிடும்
குருட்டு நம்பிக்கைச்
சாதியில்லை நான்.

வீரச் செங்குட்டுவனால்
வீழ்த்தப்பட்ட வட மன்னர்
கனகரும் விசயரும்
கோவலக் கண்ணகிக்குக்
கோயிலெடுக்க,
இமயத்திலிருந்து
எடுத்த கல்லைக்
கன்னியாகுமரி தாண்டிக்
கேரளம் வரைத்
தலையிலேயே
சுமந்து வந்த
'வரலாற்றைக்'
கேள்வி கேட்காமல்
நம்பும்
பகுத்தறிவு வாதி!

17. மனுநீதி மந்திரி


மாண்புமிகு மந்திரியின்
மானம் போக்க வந்த மகன்
இறக்குமதிக் காரை
வீதியில் வேகச் சோதனை
செய்தபோது
காரில் அடிபட்டு
இறந்துபோன
கன்றை நினைத்துக்
கதறிய தாய்ப் பசுவுக்கு
கேட்காமலேயே
நீதி வழங்கினார்
மனுநீதி மந்திரி -
விழா ஒன்று எடுத்து
வைக்கோல் கன்றைப்
பரிசளித்து!

16. விடிவை நோக்கி


இருட்போர்வையை மெல்ல விலக்கி
வெளிச்சத்தைத் தேடும்
வானம்.

கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
ஒளிப்போட்டியில் வென்று
கம்பீரித்து நிற்கும்
விடிவெள்ளி.

முன் தூங்கி முன்னெழும்
சுறுசுறுப் பறவைகளின்
இரைதேடும் பயணங்களின்
துவக்கம்.

இன்னும்.....

கவிதையை முடித்துக்
கண்ணுறங்கி விழித்ததும் -

கனவில் மட்டுமே
காணக் கிடைக்கும் இன்பங்களைக்
கண நேரத்தில்
கணகண ஒலியில் அபகரிக்கும்
அலார அரக்கர்கள்.

இன்னொரு மோசமான நாளின்
துவக்கத்தை
உணர்ந்து விட்ட
துயரப் பெருமூச்சு.

தண்ணிரைத் தேடிக்
கைகளை ஒடித்துக்
குழாய்களை அடித்துக்
காற்றோடு போராடும்
விடாமுயற்சிகள்.

அன்றைய காய்ச்சலுக்குப்
பொருள் தேடும் வகை பற்றித்
தேறாத சிந்தனைகள்.

விடிவுக்குக் காத்திருந்தும்
ஏன் விடிந்ததென்ற
எரிச்சலை உள்ளடக்கிய
இயலா ஏக்கங்கள்.