Saturday, December 1, 2012

34. வாழ்க்கை

1990-ஆம் ஆண்டு ஆந்திரா வங்கி சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கவியரங்கத்தில் படிக்கப்பட்ட கவிதை


"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் யாங்களே."

கடவுள் வாழ்த்து கம்பனின் உபயம்
கவிதை உலகில் கம்பன் ஓர் இமயம்
இமயக்கவிக்கு இந்த எறும்பின் வணக்கம்.

மெல்லத் தமிழ் இனிச் சாகும்
என மனம் வருந்திச் சொல்லிச்
சென்றான் மகாகவி பாரதி
மரணப் படுக்கையில் வீழ்ந்திருந்த
தமிழ்க் கவிதைக்கு
மறுவாழ்வளித்து
மேதினியில் மீண்டும் மிடுக்குடன்
உலவ விட்ட
தமிழ்நாட்டின் தவப்புதல்வனுக்கு
என் தலைதாழ்ந்த வணக்கங்கள்.

கவிதையென்றால் காது பொத்திக் காத தூரம் ஓடுவோரும்
இவர் கவிதையென்றால் கேட்டு மகிழ்வார்
கல்லா மாந்தரும் கவிதையின்பம்  பெற்றுக்
களித்திடச் செய்தவர் இத் திரையிசைக்கவி.
எளிய கவிதையில் அரிய பொருள் தந்த
இனிய கவிஞர் கண்ணதாசனுக்கும் என் அஞ்சலி.

பெருங்கவிஞர் பெயர் சொல்லிச் சபையில்
குறுங்கவி கொஞ்சம் சொல்ல வந்த அடியேன் நான்
நறும் கல்வியும் ஞானமும் நிரம்பப் பெற்றோரே
வரும் என் கவிதையில் பிழை கண்டால் பொறுப்பீரே!

நினைத்ததுமே கவிதைதனை மனதில் யாத்து
உடன் மொட்டவிழ்க்கும் ஆசுகவியல்ல நான்
பொருள் வேண்டிப் புரவலர், செல்வர் என்று அனைவரின்
அருள் வேண்டிக் கவிபாடும் காசுகவியும் அல்ல
எண்ணங்களாய் என் மனதில் எழுந்தவற்றைச்
சொற்களாக்கி உங்கள்முன் வீசுகவி நான்
புனைந்த கவி சிறக்காமல் பல்லிளித்தால் மாசுகவியென்று
பட்டம் எனக்குச் சூட்டாமல் பொறுத்தருள்வீர்!

வாழ்க்கை எனும் பொருள் பற்றிப் பாடப் பணித்தார்
வாழ்வின் பொருள் பற்றிச் சிந்தித்தேன் நானும்.
பொருளின்றி வாழ்வேது இவ்வுலகில்?
வள்ளுவரும் சொன்னதுதான் இந்தத் தகவல்!
பொருள் இன்றி வாழ்க்கைதனை வாழக் கூடும் - ஆயின்
வாழ்க்கையே பொருள் இன்றிப் போகக் கூடுமோ?

சிந்தித்தால், வாழ்க்கையில் இங்கே பொருளில்லை பலர்க்கு
அன்றாட உணவு கொள்ளப் பொருள் வேண்டி
இரந்து நிற்பார் வீதியில் சிலர்
பொருள் நிறையப் பெற்றிருந்தும் இங்கே
வாழ்க்கையின் பொருளை எண்ணி
உறக்கம் கொள்ளாமல் கிடந்து துடிப்பார்
மலர் மஞ்சில் வேறு சிலர்

வாழ்க்கைதான் என்னவென்று அறிய வேண்டி
மனதில் எழுந்த கேள்விக்கோர் விடையைத் தேடி
அலைந்து திரிந்தது நெஞ்சம்தான் எண்ணக்காட்டில்.
பார்வை உயர்ந்து நிலைத்தது சூனிய வானில்.

வானில்தான் அப்போதோர் அற்புதக் காட்சி
தானே நுழைந்து அமர்ந்ததென் கண்மணிக்குள்
வண்ணங்கள் ஏழுமங்கே ஒளிர்ந்து சிரிக்க
வில்லாகத் தெரிந்தது அக்காட்சி வானில்.

கேள்விக்கு விடை கண்டேன் என்றது மனது
'வாழ்க்கை ஓர் வானவில்' என்று கண்டு சொன்னது
'வானவில்லைப் போல்
வாழ்க்கையும் ஓர் வண்ணக் கலவை' என்று.
விண்டு சொன்னது.

விஞ்ஞானம் அறிந்தோர்க்கு வண்ணங்கள் மாயை
வெண்மையென்னும் வெளியில் ஒடுங்கும் ஒளிச்சிதறல்கள்
மெய்ஞ்ஞானம் அடைந்தோர்க்கு வாழ்வும் ஓர் மாயை
அண்டமெனும் வெளியில் கலக்கும் குடுவைக் காற்று

அஞ்ஞானி எனக்கு ஏற்பில்லை இந்த வானவில் ஒப்பீடு
வாழ்க்கைக் கலையில் வல்லோரை
வானத்தை வில்லாய் வளைப்பர் என்பர்
வந்த சுவட்டிலேயே மறையும்
வானவில்லே வாழ்க்கையென்றால்
வேண்டாம் அவ்வாழ்வெனக்கு!

பின் வாழ்க்கையின் பொருள்தான் என்ன?
மீண்டும் ஓர் விடையைத் தேடித்
துருவினேன் வாழ்வின் கூறுகளை.
புகைவண்டியில் சென்றபோது
கிடைத்ததோர் விளக்கம் எனக்கு
வாழ்க்கை ஓர் பயணம் என்று.

பயணம்போல் வாழ்க்கைக்கும்
பாதைகள் பலவும் உண்டு.
விண்ணில் பறப்போர் சிலர்,
மண்ணில் புரள்வோரும் உளர்!

உயர்வகுப்பும் தாழ்வகுப்பும் உண்டுதான்
வாழ்க்கைப் பயணத்தில்.
இட ஒதுக்கீடும் உண்டு
பயணத் துணைகள் உண்டு
பிணக்குகள் உண்டு
பாதியில் விடைபெறுவோர் உண்டு
சொல்லாமலே பிரிந்து செல்வோரும் உண்டு - பணம்
உள்ளோர்க்கு நல்லுணவும்,
பிற வசதிகளும் உண்டு
இல்லார்க்கோ எப்போது முடியும்
இப்பயணம் என்ற சலிப்புதான் உண்டு!


விதிகள் உண்டு, விலக்குகள் உண்டு
மீறுவோர்க்கு தண்டனை உண்டு
தப்பிக்க வழிகளும் உண்டு!


பாதைகள் மாறுவதுண்டு
திருப்பங்கள் நிறைய உண்டு.


வழிப்பறிகள் உண்டு வழித்தவறுதலும் உண்டு
பயணத் தடைகள் உண்டு
தடம் புரளல் உண்டு
விபத்துகள் உண்டு, விபரீதங்களும் உண்டு
வாழ்க்கை ஓர் பயணம் என்ற
கருத்திலும் பொருத்தம் உண்டு.

ஆனால் பயணத்துக்கோர் துவக்கம் உண்டு,
முடிவுண்டு,
நோக்கம் உண்டு
வாழ்க்கைக்கு இவைதான் உண்டோ?
துவங்குமிடம் தனக்குத் தெரியாது
முடியுமிடம் எவர்க்கும் தெரியாது!
நோக்கம் ஒன்று உண்டா என்பதும் தெரியாது

இறைவனை அடைவதே நோக்கமென்பார் சிலர்
இதை ஏற்காதவர் வேறு சிலர்
ஏற்றவரும் இதுபற்றி நினைப்பதில்லை பல பொழுதில்!
பயண முடிவில் இன்னோர் பயணம் உண்டென்றும் பகர்பவர் பலர்.

நோக்கமில்லா வாழ்க்கையையும்
இலக்கு நோக்கிய
பயணத்தையும் ஒன்றாகக் கருதுவதெப்படி?
ஏற்கவில்லை மனது.

மீண்டும் தேடினேன் வேறொரு பொருளை வாழ்க்கைக்கு
கால்கள் கடந்தன ஓர் இருப்புப் பாதையை
மனமோ சென்றது விரிந்த அப்பாதையின் பின்னே

இணையாகச் செல்லும் பாதை
இரண்டு தண்டவாளங்களாய்.
இறுதிவரை பிரிவதில்லை இணை,
இணைவதும் இல்லை ஏனோ!

தூரத்தில் பார்த்தால் அங்கே
தெரியும் ஓர் இணைப்பு போல்.
நெருங்கினால் விலகும் அவையும்,
தனிமை குலைந்த காதலர் போல்!

மீண்டும் ஓர் தொலைதூரப் புள்ளியில்
தோன்றும்தான் இரண்டும் இணைந்து

வாழ்க்கை கூட இப்படித்தானே?

குறிக்கோள் ஒன்றை நாமும்
குறி வைத்து அடைந்த பின்னே
திருப்திதான் நமக்கும் இல்லை
வேறோர் குறிக்கோள் அங்கே
தொலைவில்தான் மையம் கொள்வதால்!

முயற்சியும் இலக்கும் இங்கே
இணையாகச் செல்லும்
இருப்புப் பாதை போல்.

இலக்குதான் எட்டும் தொலைவில்
இருப்பதாய்த் தோன்றும் நமக்கு
நெருங்கிய பின்பே அறிவோம்
இலக்கு அங்கே விலகிப் போனதென்று.

முயற்சி மீண்டும் தொடரும் பின்னே
பிறிதுமோர் இலக்கை நோக்கி
முயற்சியும் இலக்கும் இதுபோல்
தொடர்ந்து போகும் இணையாய்
முடிவில் இரண்டும்
வேறோர் பாதையில் கலக்கும் வரை
இரு தண்டவாளங்களும் இணைந்து விட்டால்
முடிந்து விடும் பாதை அங்கே!

இலக்கை நாமும் எட்டி விட்டோம் என்றால்
பின் வாழ்க்கையில் ஏது தொடர்ச்சி?

பின், வாழ்க்கை என்பது என்ன?
வாழ்க்கை ஓர் இலக்கு
அதை அடைவதே வாழ்வின் நோக்கம்
என்றும் நாம் கொள்ளலாம்
ஆயினும் இவ்விளக்கமும்
ஏற்றதாய் இல்லை எனக்கு.

இலட்சிய வாழ்க்கை என்பது அலட்சிய மனிதர்க்கேது?
'சூரியன் நாளைக்காலை மறக்காமல் உதிக்கட்டும் முதலில்
பிறகு நாம் நினைத்துப் பார்ப்போம்
நாளை எனும் நாளைப்பற்றி
அதுவரை ஆழ்ந்திருப்போம்
இன்றையத் தேவைகளின் தேடலில்'

என்பதே இங்கு பலரின் இயல்பாய் இருக்கும்போது,
இலக்கு ஏது, முயற்சிதான் ஏது?

வாழ்க்கையென்னும் புதிருக்குத்தான்
பொருத்தமாய் ஓர் விடையைத் தேடி
சலித்துத்தான் போனேன் நானும்
சற்றே கண்ணயர்ந்தேன்
விழித்திருந்தேன் கனவுகளில்
உறங்கிக் கொண்டே
உறக்கம் கலைந்ததும்
நினைத்திருந்தேன் கனவுகளை
தோன்றியது அப்போது ஓர் எண்ணம்
இவ்வண்ணம்!

வாழ்க்கை ஓர் கனவென்று கருதுவதில்
பொருத்த்ம் உண்டோ?
கனவுதான் வாழ்க்கை எனலாம்;
காரணங்கள் பல உண்டு.

வாழ்வில் நடப்பவை பலவும்
நம்பக் கூடியதாய் இல்லை
உயர்ந்த ஓர் எண்ணம்
உள்ளத்தில் உதித்து
அதை வெளியே சொன்னால்
'காணாதே கனவு நீயும்'
என்று கண்டிப்பார்,
கேலி செய்வார்.

எதிர்பார்ப்புகள் பலவும் இங்கே
பகல் கனவாய்ப் பொய்க்கின்றன
வாழ்க்கையுடன் போராடிச்
சலித்து ஓய்ந்த பலரும்
தம் நிலை மறந்து வாழ்வதும்
கனவுலகில்தான்!

சொப்பன வாழ்க்கை என்றே
சொல்லியும் போனார் முன்னோர்
கலையும் ஓர் கனவு போல
வழ்வும் ஓர் மாயை என்றார்
வண்ணக் கனவுகள்
நாமும் வலிந்து கண்டால்
தன்னாலே வாழ்வில் ஏற்றம் வரும்
என்பர் சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்

பாதியில் கலையும் கனவு போல் சில நேரம்
முடியும் வாழ்க்கையும் இடையில் சட்டென்று.
கனவுக்கும் வாழ்வுக்கும் இதுபோல்
பொருத்தங்கள் பல உண்டு

ஆனால் கனவுதான் வாழ்க்கை என்பதும்
பொருந்தாத விளக்கம்தான்.
வாழ்க்கைக்கு முயற்சி வேண்டும்
கனவுக்கு உடல் அயர்ச்சியே போதும் (உறக்கம் வர).
விழிப்புதான் வாழ்க்கை என்றால்,
உறக்கத்தில் உலவும் கனவு..
கனவை வாழ்வின் மறுபக்கம்
என்று கருதுவதே
பொருத்தமாய் இருக்கும்.

பின், வாழ்க்கையின் பொருள்தான் என்ன?
பிறர் பொறுமையைச் சோதிப்பதோ?
உங்களில் சிலர் இப்படிக் கேட்க
நினைப்பது தெரிகிறது.
பொறுத்திருங்கள் இன்னும் கொஞ்சம்
வாழ்க்கையின் பொருளைத்தான் தேடுகிறேன்
கண்டதும் நானும் விடையைச் சொல்லி
விடைபெறுவேன் விரைவில்; அஞ்சேல்!

தேடித் தேடிக் களைத்தேன் நான்
தேடிய பொருள் கிட்டவில்லை
அகராதிகள் ஆயிரம் இருந்தும்
அவை எதிலும் இல்லை வாழ்வுக்குப் பொருள்

நாடிப் போனேன் பலரையும்
அவரிடம் கேட்டறியலாம்
வாழ்வின் பொருளையென்று.
எவரும் விடை சொல்லவில்லை எனக்கு.
நேரமில்லையாம் எவர்க்கும்
அனைவரும்எதையோ
தேடிக் கொண்டிருந்ததால்!

நாடிப் போனவர் அனைவருமே
எதையோ தேடிக் கொண்டிருந்ததால்
நாடிப் போன பொருள் கிடைத்தது எனக்கு.
கண்டறிந்தேன் வாழ்க்கையும்
ஓர் தேடல்தான் என்று

பிறந்த குழந்தை மண்ணில் விழுந்ததும்
அழுதிடும் அன்பைத் தேடி
தேடிய அன்பு அன்னையிடம் கிடைத்ததும்
தேடும் வேறு எதையோ வேண்டி

தேடியது கிடைத்ததும் மீண்டும் தேடல்.
வாழ்வின் நோக்கம் தேடல் ஒன்றே.

மண்ணில் இந்தத் தேடல் இன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ?

எதையோ தேடி அலையும் மனிதரே!
தேடுவீர் எதையும் உம்மிடமே

மதங்கள் சொல்லும் நீதியும் இதுவே
சுலபம் இல்லை எவர்க்கும் இதுவும்
எனவே தேடல் இங்கே நிற்பதே இல்லை.

இறந்த பின்பாவது தேடல் நிற்குமா?
யாருக்குத் தெரியும் இதற்கு விடை?
உடலைப் பிரிந்த உயிரும் உறைவிடம் வேண்டி
தேடிச் செல்லுமாம் பிறிதொரு உயிரை
எனவே தேடல்தான் நித்தியம் இங்கே!

சூரியனைச் சுற்றும் பூமியும்
மற்ற கோள்களும் கூட
எதையோ தேடித் தேடியே அலையும் போலும்!

பல்லாயிரம் கைகளைக் கதிர்களாய் வீசிக்
கதிரவனும் எதையோ தேடி அலைகிறானோ தினமும்?

ஆதலினால் உமக்குச் சொல்வேன் நான்
தேடலே வாழ்க்கை என்று.
என் கவிதையைக் கேட்டு முடித்ததும்
தேடிச் செல்வீர் ஓர் நல்ல கவிதையை.
அறிவேன் நானும்!

தேடலாம் எதையும் அது கிடைக்கும்வரை
தேடலாம் பிறவற்றையும் இதயம் இயங்கும் வரை
தேடினால் கிடைக்கும் எதுவும் உமக்கு
வாழ்க்கையை வகுக்கும் சத்தியம் இதுவே
சான்றோர் சொன்ன தத்துவம் இதுவே










No comments:

Post a Comment